புஜேராவில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிப்பு

புஜேரா ஹஜார் மலைத்தொடரை ஒட்டிய இயற்கை வளம் நிறைந்த அமீரகத்தின் முக்கியமான பகுதியாகும்.

Update: 2024-06-26 01:18 GMT

புஜேரா,

அமீரகம் இந்தியாவை போலவே பழமையான வரலாறுகளை உடையது. அதில் மலையும், மலைசார்ந்த பகுதியான புஜேரா தன்னுள் பல்வேறு வரலாறுகளை சுமந்து வருகிறது. அமீரகத்தில் பாறைகளால் ஆன மலைப்பகுதிகளை கொண்டது புஜேராவாகும். இந்த பகுதிகளில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இயற்கையான பகுதிகள் அதிகம் உள்ளது. புஜேரா ஹஜார் மலைத்தொடரை ஒட்டிய இயற்கை வளம் நிறைந்த அமீரகத்தின் முக்கியமான பகுதியாகும்.

இங்கு அதிக அளவில் பனை மற்றும் பேரீச்சை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புஜேராவில் பழங்காலத்தில் சர்கியின் என்ற பழங்குடியினரே ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தனர். இதில் சமீபத்தில் ஜெபல் காப் அடோர் என்ற பாறைகள் சூழ்ந்த பகுதியில் புஜேரா அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.

இந்த பகுதியில் புஜேரா இயற்கை வள பாதுகாப்பு கழகம் சார்பில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அதில் அமீரக குழுவுடன் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் கலந்துகொண்டு சுமார் 30 இடங்களில் மனிதர்கள் வாழ்ந்த தொன்மையான பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக நாடோடியாக திரிந்த பழங்கால மக்கள் கூட்டம் தாங்கள் தங்குவதற்கு இந்த பாறை இடுக்குகளை பயன்படுத்திக்கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 7 ஆயிரத்து 500 முதல் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதியாக ஜெபல் காப் அடோர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரே மாதிரியான மக்கள் அல்லாமல் பல கலாசாரங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு காலகட்டங்களில் அடுத்தடுத்து வசித்து வந்துள்ளனர். இதில் வறண்ட காலநிலைக்கு ஏற்றவாறு அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டுள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சியில் மூன்றடுக்கு கற்களாலான கருவிகள், விலங்குகளின் எலும்பு கூடுகள் மற்றும் நெருப்பு மூட்டும் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெருப்பு மூட்டிய பகுதிகள் தீயில் சுட்டதுபோன்றும், கரித்துண்டுகளுடனும் காணப்பட்டது.

இதில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் முதலில் வேட்டையாடி வாழ்ந்த மக்கள் பின்னர் கால்நடைகளை வளர்க்க தொடங்கி உள்ளனர். அதன் பிறகு தங்கள் உணவை தாங்களே உற்பத்தி செய்து அதனை சமைத்து உண்ணும் வகையில் மேம்பட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே ஜெபல் காப் அடோர் பாறை பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர சுண்ணாம்பு கற்களாலான பாறைகளில் இருப்பிடங்களை பண்டைய கால மனிதர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அந்த பாறை பகுதிகள் மனிதர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்துள்ளது.

ஹஜார் மலைத்தொடர் மற்றும் பள்ளத்தாக்குகளில் ஓடிய தண்ணீரை பயன்படுத்தி சமவெளியில் தங்கள் வாழ்வாதாரங்களை அந்தகால மனிதர்கள் அமைத்துள்ளனர். இதன் காரணமாகவே பல காலகட்டங்களில் மனிதர்கள் தங்குவதற்கு இந்த பாறை பகுதி ஈர்க்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மேலும் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள புஜேரா பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஹமத் பின் முகம்மது அல் சர்கி அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்