#லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

போருக்கு மத்தியில் 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் சென்றனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

Update: 2022-06-16 21:44 GMT


Live Updates
2022-06-17 14:18 GMT

அமெரிக்கா பிற நாடுகளை தங்களின் காலனி நாடுகள் போல் நடத்துவதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளர். மேலும், ரஷிய பொருளாதாரம் குறித்த தவறான கணிப்புகள் நிறைவேறவில்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

2022-06-17 11:10 GMT

லண்டன்

இங்கிலாந்தின் தலைமை இராணுவ அதிகாரி டோனி ராடகின் கூறியதாவது:-

ரஷியா ஏற்கனவே மூலோபாய ரீதியாக தோற்றுவிட்டது. நேட்டோ வலுவாக உள்ளது. பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோவில் சேர விரும்புகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த சில வாரங்களில் தந்திரோபாய வெற்றிகளை அடையலாம்.

ஆனால் சிறிய ஆதாயங்களுக்காக அவர் தனது நாட்டின் இராணுவ சக்தியில் கால் பகுதியை தியாகம் செய்து விட்டார். துருப்புக்கள் மற்றும் உயர் தொழிநுட்ப ஏவுகணைகள் இல்லாமல் போய்விட்டன.

ரஷியா ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பகுதிகளில் ஐந்து கிலோமீட்டர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.ஆனாலும், ரஷியாவிற்கு பாதிப்புகள் உள்ளன, ஏனெனில் ரஷியா தனது படைகளை இழந்து வருகிறது, உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் இல்லாமல் இயங்குகிறது.

அதிபர் புதின் தனது ராணுவத்தின் சக்தியில் 25 சதவீதத்தை ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பைப் பெற பயன்படுத்தி உள்ளார்.

இங்கிலாந்து நீண்ட காலம் அதிக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் என கூறினார்.

2022-06-17 10:30 GMT

கிழக்கு உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகரத்தின் பெரும்பகுதியை ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டான்பாஸை கைப்பற்ற சிவிரோடொனெட்ஸ்கில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், அனைத்து பாலங்களையும் தகர்த்து அந்நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும், அங்குள்ள அசோட் தொழிற்சாலையில் தஞ்சமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

2022-06-17 09:35 GMT



கீவ்,

ரஷியாவின் ஆயுதம், போர் வீரர்களை ஏற்றி சென்ற படகை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான தீவிர போரில் ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இதில், ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் ஒடிசா நகருக்கு தெற்கே அமைந்த பாம்பு தீவுக்கு (ஸ்மைனை தீவு) ரஷிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த படகை உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளன. அந்த படகில் வீரர்கள் இருந்துள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இதனை ஒடிசா கவர்னர் மேக்சிம் மார்செனகோ தெரிவித்து உள்ளார். வேசிலி பெக் என பெயரிடப்பட்ட அந்த படகில் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் சாதனம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அது தவறி விட்டது என உக்ரைனின் கடற்படை தளபதி தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தளபதி தனது பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஷியாவின் கருங்கடல் பகுதியில் இந்த வேசிலி பெக் படகு பயணித்து வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலால் அதன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

2022-06-17 09:09 GMT

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஏறத்தாழ 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனின் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பலரும் தங்கள் வீடுகள், உடைமகளை இழந்து நிவாரண முகாம்களிலும் அண்டை நாடுகளிலும் தஞ்சம் அடைந்து இருப்பது போரின் கொடூரத்தை காட்டி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் முழுவதும் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து இருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் கிழக்கு டோன்பாஸ் நகரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-17 00:40 GMT


 உக்ரைனுக்கு 35 காலாட்படை போர் வாகனங்களை ஸ்லோவேனியா அனுப்புகிறது.

இதுதொடர்பாக பிரஸ்ஸல்ஸில் நேற்று நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, ஸ்லோவேனியாவின் பாதுகாப்பு மந்திரி மர்ஜான் சரேக் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அந்நாட்டு ஊடகமான RTVSLO தெரிவித்துள்ளது. ஆனால் எந்த வகையான வாகனங்கள் வழங்கப்பட்டன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்லோவேனியா தனது ஆயுதக் களஞ்சியத்தை தீர்ந்துவிட்டதாக மர்ஜான் சரேக் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. 

2022-06-17 00:02 GMT


உக்ரைன் குழுவின் உறுப்பினர் பதவிக்கான முறையான வேட்பாளராக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு இன்று முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தூதர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022-06-16 23:30 GMT


கிழக்கு நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் ரஷிய குண்டுவீச்சுக்கு எதிராக தங்கள் ராணுவம் இன்னும் போராடிக்கொண்டிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர். மேலும் தெற்கில் எதிர்த்தாக்குதல் மூலம் புதிய முன்னேற்றம் ஏற்படுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

2022-06-16 22:55 GMT


உக்ரைன் மீதான ரஷிய போர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போர் 5-வது மாதமாக தொடர்கிறது.

இந்தப்போரில் துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டாலும், தலைநகரை கைப்பற்ற இயலாமல் போய்விட்டது. இப்போது ரஷியாவின் கவனம், கிழக்கு உக்ரைன்மீது படிந்துள்ளது. அங்குதான் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷியா கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் இதுவரையில் 31 ஆயிரத்து 241 டன் மருந்துகள், உணவு பொருட்கள், மருத்துவ கருவிகள், சாதனங்களை வழங்கி உள்ளது. இந்த தகவலை ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிக்கைல் மிஜின்ட்சேவ் தெரிவித்தார்.

2022-06-16 21:46 GMT

போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

ஐரோப்பாவின் முக்கிய தலைவர்களான பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் போலந்தில் இருந்து நேற்று ரெயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றடைந்தனர். அவர்களுடன் ருமேனியா அதிபர் கிளாஸ் ரோஹனீசும் சேர்ந்து கொண்டார்.

அவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் உக்ரைனுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளனர்.

போரின் தொடக்கத்தில் ரஷியாவினால் கைப்பற்றப்பட்ட இர்பின் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நிருபர்களிடம் பேசும்போது, “இங்கு ரஷிய படைகளின் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து போர்க்குற்றங்கள் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த நகரத்தை பேரழிவுக்கு வழிநடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தலைநகரை தாக்குவதில் இருந்து ரஷிய படைகளை தடுத்து நிறுத்திய இர்பின், கீவ் மக்களின் தைரியம் பாராட்டுக்குரியது” என தெரிவித்தார்.

“சுதந்திரத்துக்காக போராடுகிற உக்ரைனுக்கு தேவைப்படும் வரையில் உதவிகள் செய்யப்படும்” என்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்