தாமதமான கருக்கலைப்பு சிகிச்சை.. பெண் மரணம்: டிரம்பின் கொள்கைகளை சாடிய கமலா ஹாரிஸ்

ஆம்பர் தர்மன் மரணம் குறித்து தேர்தல் நாளிலும் கமலா ஹாரிஸ் மக்களிடையே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-09-19 10:55 GMT

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கருக்கலைப்புக்கு தாமதமாக சிகிச்சை பெற்ற பெண் மரணம் அடைந்த விவகாரம், ஜனாதிபதி தேர்தலில் எதிரொலித்துள்ளது.

அமெரிக்காவில் தேசிய அளவிலான கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வந்தன. குறிப்பாக ஜார்ஜியாவில் கருக்கலைப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 2 வாரங்களில் ஆம்பர் தர்மன் என்ற கர்ப்பிணி, தாமதமான கருக்கலைப்பு சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கடந்த திங்களன்று புலனாய்வு ஊடகத்தில் முதல் முறையாக வெளியானது. தாமதமான சிகிச்சையால் இறந்ததாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

இந்த விவகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கையில் எடுத்துள்ளார். அம்பர் தர்மனின் மரணத்தை கடுமையான கருக்கலைப்பு சட்டங்களுடன் முடிச்சு போட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக சாடினார்.

ஆம்பர் தர்மனின் துயரமான முடிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் கமலா ஹாரிஸ் விளக்கமாக பேசினார். அப்போது, கருக்கலைப்பு மாத்திரையால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் 20 மணிநேரம் காத்திருந்து இறந்த ஜார்ஜியா இளம் தாயின் மரணமானது, டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளின் விளைவுகளை காட்டுகிறது என்றார்.

தேசிய அளவிலான கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேரை டிரம்ப் தனது பதவிக்காலத்தில் நியமித்தார். அத்துடன், கருக்கலைப்பு சட்டங்கள் தொடர்பாக மாநிலங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று தான் நம்புவதாக பலமுறை கூறினார்.

எனவே, இந்த விவகாரத்தை டிரம்பின் கொள்கைகளுடன் இணைத்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கமலா ஹாரிஸ். மேலும், பெண் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருக்கலைப்பு பிரச்சினையை ஜனநாயக கட்சி பயன்படுத்தி வருவதால், ஆம்பர் தர்மன் மரணம் குறித்து தேர்தல் நாளிலும் கமலா ஹாரிஸ் மக்களிடையே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலா ஹாரிசின் குற்றச்சாட்டுக்கு டிரம்பின் பிரசாரக் குழு பதில் அளித்துள்ளது. மருத்துவமனை மீதுதான் தவறு உள்ளது என்றும், அவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை வழங்க தவறிவிட்டதாகவும் கூறி உள்ளது.

பாலியல் பலாத்காரம், பாலுறவு மற்றும் தாயின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகியவற்றுக்கு ஜார்ஜியா சட்டம் வழங்கி உள்ள விதிவிலக்குகளை டிரம்ப் எப்போதும் ஆதரித்தார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். அந்த சட்டம் வழங்கிய விதிவிலக்குகளுடன், ஆம்பர் தர்மனின் உயிரை பாதுகாக்க மருத்துவர்கள் ஏன் விரைவாக செயல்படவில்லை என தெளிவாகத் தெரியவில்லை என்றும் கரோலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்