அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு - கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

Update: 2024-09-19 13:24 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.

இந்த நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கமலா ஹாரிஸ் விவாதத்தில் வெற்றி பெற்றதாக கூறுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக ஏ.பி.-என்.ஓ.ஆர்.சி. நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், டிரம்புக்கான ஆதரவு வாக்காளர்களிடையே அதே அளவில் நிலைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூலை மாதத்திற்கு முன்பு வரை இருந்த நிலவரம் தற்போது மாறியிருப்பதாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு வாக்காளர்களின் ஆதரவு பெருகியுள்ளது என்றும் கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

சுமார் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும், 44 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர் மீது எதிர்மறையான பார்வையை கொண்டிருக்கின்றனர் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10-ல் 6 வாக்காளர்கள் டிரம்புக்கு எதிரான பார்வையை கொண்டிருக்கின்றனர் என்றும், 10-ல் 4 வாக்காளர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இரு கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்காத பொதுவான வாக்காளர்களில் பலர் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவர் மீதும் எதிர்மறையான பார்வையை கொண்டிருக்கின்றனர். கமலா ஹாரிஸ் மிகவும் பலவீனமான அதிபர் வேட்பாளர் என டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தாலும், பெரும்பாலான வாக்காளர்கள் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே கடுமையான போட்டியாளர்கள்தான் என்று கருதுவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்