ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-07-01 13:01 GMT

சென்னை,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பா.ஜனதாவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, பா.ஜனதாவினர் வன்முறை செய்பவர்கள் என்றும் அவர்கள் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எப்பொழுதும் போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மை நிலையை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் விவகாரம், இன்று சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வழியை இந்தியா கூட்டணி வெகுதூரம் கொண்டு சென்றுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற இழிவான கருத்துகளால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகின்றனர். எந்த அளவு தோல்வியும் இந்தியா கூட்டணியின் ஈகோவை அடக்கிவிடாது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்