தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை விலக வேண்டும்; சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பேட்டி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை விலக வேண்டும் என்று சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பேட்டி அளித்து உள்ளனர்.

Update: 2022-07-05 15:48 GMT

பெங்களூரு:

விதான சவுதா மூலம் பொய்

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 575 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத் பால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை அரசு பணி இடைநீக்கம் செய்து உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தோ்வில் முறைகேடு நடக்கவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவும் கூறி வந்தனர். இந்த வழக்கில் அரக ஞானேந்திரா வீர வசனம் பேசி வந்தார். தற்போது கூடுதல் டி.ஜி.பி. கைதாகி உள்ள நிலையில் அவர் என்ன சொல்ல போகிறார். போலீஸ் துறை மீது வந்த குற்றச்சாட்டுகளை போலீஸ் மந்திரியாக இருந்து கொண்டு அரக ஞானேந்திரா உதாசீனப்படுத்தினார். அவர் விதான சவுதா மூலம் 6½ கோடி மக்களிடம் பொய் கூறி உள்ளார். இதனால் அவரை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக பசவராஜ் பொம்மை நீக்க வேண்டும்.

நீதிபதிக்கு பாதுகாப்பு இல்லை

ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் பெங்களூரு கலெக்டராக இருந்த மஞ்சுநாத் கைது செய்யப்பட்டு உள்ளார். ஊழல் தடுப்பு படையை ஊழல் மையம் என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஊழல் தடுப்பு படையை விமர்சித்த ஐகோர்ட்டு நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. நீதிபதிக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை காங்கிரஸ் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

எங்கள் ஆட்சியில் ஊழல் தடுப்பு படை சரியாக தான் வேலை செய்தது. தற்போது ஊழல் தடுப்பு படையை தவறாக பயன்படுத்தினால் அது அரசின் தவறு. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டு ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்-மந்திரியை கேட்டு கொள்கிறோம்.

பதவி விலக வேண்டும்

அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தேர்வு வினாத்தாளை திருத்த முடியுமா?. நியாயமான முறையில் தேர்வு எழுதியவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இந்த முறைகேடு சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை விலக வேண்டும்.

எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்து இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது எங்களை குறைசொல்லி தப்பிக்க வழி இல்லை. அமலாக்கத்துறைக்கும், ஊழல் தடுப்பு படைக்கும் தொடர்பு இல்லை. இந்த பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப எங்கள் கட்சியின் ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வீட்டில் ஊழல் தடுப்பு படை சோதனை நடந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்