பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிமீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு

பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.173 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 18:45 GMT

பெங்களூரு:

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரம் என்று கர்நாடக தலைநகர் பெங்களூரு போற்றப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அது அடைக்கலம் கொடுத்து பணியமர்த்தி வருகிறது. வேலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பெங்களூருவில் குடிபெயர்ந்து வருகிறார்கள். இதனால் நகரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி பெங்களூரு நகரில் மட்டும் 1 கோடிக்கு அதிகமான வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 70 லட்சம் இருசக்கர வாகனங்கள் தான். இது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை தான். பதிவு செய்யாமல் பல வாகனங்கள் நகரில் ஓடுகிறது.

இந்த வாகனங்களில் பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், எந்த பலனும் அளிக்கவில்லை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நகரில் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாலும், யாரும் செவிசாய்க்காமல் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

நகரில் உள்ள பெரும்பாலான சர்க்கிள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அதில் பதிவாகும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி போக்குவரத்து போலீசாரும், தங்கள் செல்போனில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு குறுந்தகவல் மற்றும் வீடுகளுக்கு அபராத ரசீது அனுப்பியும் பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க போலீசார் 50 சதவீத தள்ளுபடி சலுகை அறிவித்தனர். அதில் பலர் அபராதங்களை செலுத்தினர். ஆனாலும் இன்னும் பலர் அபராதம் செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளது. இதன்மூலம் மொத்தம் ரூ.173.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் வீடுகளுக்கு அபராத ரசீதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெங்களூரு நகரில் கடந்த 9 மாதங்களில் விபத்துகளும் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும் பெங்களூரு நகரில் 3,706 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில், 651 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,155 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிகளை மீறுவது தான் என்றும், போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என எவ்வளவு விழிப்புணர்வு நடத்தினாலும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்