மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். பா.ஜனதா பிரமுகர் ஒருவர் ‘பல்டி’ அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

Update: 2023-10-27 21:01 GMT

மண்டியா:-

தண்ணீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரி நதியின் மையப்பகுதியான மைசூரு, மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மண்டியா டவுனில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் 50 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் ஆதரவு

இந்த நிலையில் நேற்று விசுவேஸ்வரய்யா பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினருக்கு ஆதரவாக மண்டியா டவுன் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், அங்கிருந்து ஊர்வலமாக விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு வந்தனர்.

அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மேலும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

துணிச்சலான முடிவு

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் விவசாயிகளின் பிள்ளைகள். விவசாயம் செய்து தான் நாங்கள் வாழ்கிறோம். காவிரி நதி எங்களுடையது. காவிரி இங்கு தான் உற்பத்தியாகிறது. அதனை நம்பி தான் நாங்கள் வாழ்கிறோம். காவிரி பிரச்சினையை அரசு பொறுப்புடன் கையாளவில்லை. காவிரி போராட்டத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பங்காரப்பா எடுத்த துணிச்சலான முடிவை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நீதி வழங்காத அரசு ஏன் இருக்க வேண்டும். காவிரி போராட்டத்தை யாரும் புறக்கணிக்கக்கூடாது. விவசாயிகளின் குழந்தைகள் அனைவரும் போராட வர வேண்டும். அனைவரும் வீட்டில் இருந்து போராட வர வேண்டும் என்றனர்.

பல்டி அடித்து போராட்டம்

மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா பிரமுகர் சிவக்குமார் என்பவர் நூதன முறையில் போராட்டம் நடத்தினார். அதாவது, காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து அவர், 'பல்டி' அடித்து தனது எதிர்ப்பை ெவளிபடுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், கர்நாடக விவசாயிகளின் நலனை அரசு நினைத்து பார்க்கவில்லை. விவசாயிகளுக்கு அரசு துரோகம் செய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் கன்னடர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே இவர், காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்ணை தின்றும், சாணத்தால் குளித்தும் நூதன போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்