விஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும்
விஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
பெங்களூரு:-
தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பசவேஸ்வரா மாவட்டம்
ஒய்சாலா மன்னர்களின் ஆட்சி காலத்தில் இருந்து விஜயாப்புரா என்று தான் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆதில்சாகி மன்னர் ஆட்சியில் விஜயாப்புரா மாவட்டம் பிஜாப்பூர் என்று பெயர் மாற்றப்பட்டது. அந்த பெயர் மாற்றப்பட்டு
மீண்டும் விஜயாப்புரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பசவேஸ்வரா மாவட்டம் என்று பெயரிட வேண்டும். இதை செய்ய வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்.
இந்த மாவட்டத்தில் தான் பசவண்ணர் பிறந்தார். பெயர் மாற்றம் குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்துவேன். மாவட்டத்தின் பெயர் மாற்ற சில தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் உள்ளன. பல்வேறு இடங்களில் பெயர் மாற்ற வேண்டும். இதன் சாதக-பாதகங்கள் குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசிப்பேன். கர்நாடகத்திற்கு பசவநாடு என்று பெயர் மாற்றினால் என்ன தவறு?.
மெட்ரோ ரெயில்
பசவண்ணர் தான் அனுபவ மண்டபத்தை எழுப்பினார். இது தான் உலகின் முதல் பாராளுமன்றம். அதனால் இந்த மண் பசவநாடாக வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். பெங்களூருவில் உள்ள ஒட்டுமொத்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் பசவண்ணரின் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதே போல் விஜயாப்புரா விமான நிலையத்திற்கு பசவண்ணர் பெயரிட வேண்டும்.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.
ராமநகர் மாவட்டத்திற்கு பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்போவதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.