கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது

கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-10-27 21:10 GMT

பெங்களூரு:-

முதல்-மந்திரி சித்தராமையா "ஆன்சர்மாடிமோடி" (பதில்சொல்லுங்கள்மோடி) என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

உயர்ந்த கலாசாரம்

கர்நாடக பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆகிறது. அதனால் இந்த ஆண்டு கர்நாடகத்திற்கு முக்கியமான ஆண்டு. வருகிற 1-ந் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. இது மகிழ்ச்சி, பெருமை, கொண்டாட வேண்டிய தருணம் ஆகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணித்து வந்துள்ளது. கர்நாடகத்தின் மீது ஏன் அன்பு இல்லை என்று பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். இதனால் கன்னடர்களின் கொண்டாட்ட மனநிலை குறைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு கர்நாடகம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கர்நாடகம் உயர்ந்த கலாசாரத்தை கொண்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் மீது ஏன் உங்களுக்கு அன்பு இல்லை என்று மத்திய அரசை பார்த்து வேதனையுடன் நான் கேட்கிறேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அதிக வரியை செலுத்தினாலும் கர்நாடகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

கவலை அளிக்கிறது

எங்களின் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப் படும் நிலையில் உள்ளன. எங்களின் உயர்ந்த கலாசார, பண்பாட்டை பாரபட்சத்துடன் பார்க்கிறார்கள். முக்கியமான நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நெருக்கடியான தருணத்தில் உதவி செய்யாமல் இருப்பது, அமைதி காப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. கர்நாடகம் ராஜ்யோத்சவாவை கொண்டாட தயாராகி வருகிறது. அதனால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கீகாரம், மரியாதை, நாட்டின் வளத்தில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு, மத்திய அரசை பாா்த்து கேள்வி எழுப்ப வேண்டும். கர்நாடகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெறும் வார்த்தைகளில் இல்லை, அதை செயலில் காட்ட வேண்டும். இது தொடர்பாக கர்நாடக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்