பயங்கரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்
பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவான பயங்கரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
மங்களூரு:-
தட்சிணகன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே பெருவாஜே கிராஸ் அக்ஷய் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தவர் பிரவீன் நட்டார். பா.ஜனதா இளைஞர் அணி தொண்டரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட முயன்றார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அதாவது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா படங்காடி கிராமத்தை சேர்ந்த ஹமீது என்பவரின் மகன் நவுஷாத் என்பவருக்கும் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் நவுஷாத் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பின் செயல்பாட்டாளராக இருந்ததுடன், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் தலைமறைவாக இருக்கும் நவுஷாத்தை தேடப்படும் நபராக அறிவித்ததுடன், அவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.