மங்களூரு-மடிகேரி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை
குடகில் கன மழை எதிரொலியாக மங்களூரு-மடிகேரி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடகு:
குடகு மாவட்டம் மடிகேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் விரிசல் ஏற்படுவதும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மங்களூரு-மடிகேரி சாலையில் மதநாடு அருகே உள்ள மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கூடுதல் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மண் சரிவு காரணமாக நேற்று முன்தினம் முதல் இரவு நேரங்களில் மங்களூரு-மடிகேரி தேசிய நெடுஞ்சாலை 75-ல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் பகல் நேரங்களில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தாலுகா நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.