மத்தியப்பிரதேசம்: பிறந்த குழந்தையை ரூ.5.5 லட்சத்திற்கு விற்று ஆடம்பரப்பொருட்கள் வாங்கிய தம்பதி கைது

மத்தியப்பிரதேசத்தில் பிறந்த குழந்தையை ரூ.5.5 லட்சத்திற்கு விற்று, அதன் மூலம் ஆடம்பரப்பொருட்கள் வாங்கிய தம்பதி கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2022-06-07 19:14 GMT

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஷைனா என்ற 23 வயது பெண் ஒருவர், கூலி வேலை செய்யும் அண்டர் சிங் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இருவருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு குழந்தை பிறந்தது.

ஆனால் இந்த குழந்தை ஏற்க அண்டர் சிங்கிற்கு மனமில்லை. மேலும் ஷைனாவையும் வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால், இருவரும் குழந்தையை விற்க முடிவு செய்தனர். இருவரும் குழந்தையை ஒருவரிடம் விற்றுவிட்டு, பின்னர் அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள், எல்இடி டிவி, சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்களை வாங்கினர்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒருவர், அவர்களிடம் குழந்தை தற்போது இல்லை என்பதையும் தெரிந்துகொண்டார். இதையடுத்து இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த வழக்கை போலீசார் விசாரித்தபோது, ​​பூஜா, நீலம், நேஹா ஆகியோரின் உதவியுடன் ஷைனா தனது குழந்தையை ரூ.5.5 லட்சத்திற்கு லீனா என்பவருக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து தாய் ஷைனா, குழந்தையின் தந்தை அன்டர் சிங், குழந்தையை விற்பனை செய்வதற்கு மூலமாக செயல்பட்ட மூன்று பெண்களான, பூஜா வர்மா, நீலம் வர்மா மற்றும் நேஹா சூர்யவன்ஷி, மற்றும் குழந்தையை வாங்கிய தேவாஸ் குடியிருப்பில் வசிக்கும் லீனா சிங் ஆகியோர் சட்டவிரோத தத்தெடுப்பைத் தடுக்கும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், குழந்தையை விற்ற பணத்தில் அவர்கள் வாங்கிய மோட்டார் சைக்கிள், எல்இடி டிவி, சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்