கர்நாடகத்தில் நடந்தது பா.ஜனதாவின் கொள்ளை ஆட்சி: பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

கர்நாடகத்தில் நடந்தது பா.ஜனதாவின் கொள்ளை ஆட்சி என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

Update: 2023-05-02 22:43 GMT

மண்டியா,

கொள்ளை அரசு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மண்டியா டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3½ வருடங்களாக மாநிலத்தில் ஆட்சி செய்த பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டது. இது ஒரு கொள்ளை அரசு. மாநிலத்தில் மக்களுக்காக பணியாற்றும் அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். மேஜைக்கு கீழ் லஞ்சம் பெறும் பா.ஜனதா ஆட்சி உங்களுக்கு தேவையா?.

பிரதமர் மோடி பேச மறுக்கிறார்

அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்து மக்களிடம் இருந்து பணம் வசூலித்ததுதான் பா.ஜனதா அரசின் சாதனை. இந்த பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்பது அனைவரும் அறிந்ததே. விவசாயிகளின் அனைத்து விளை பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். 2.5 லட்சம் அரசு இடம் குத்தகைக்கு கொடுக்கப்படாமல் காலியாக உள்ளது. அதை குத்தகைக்கு விடும் பணியை அரசு மேற்கொள்ளவில்லை. போலீஸ் நியமனத்தில் முறைகேடு, ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு உள்பட அனைத்து விதமான அரசு துறைகளில் நடந்த பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் வழக்கில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்.

மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை பெறவும் கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளது. மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் இந்த பா.ஜனதா அரசால் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுக்க சாத்தியமில்லை.

முடிவு கட்ட வேண்டும்

பாகிஸ்தான், இந்துத்வா போன்றவற்றை பயன்படுத்தி தேர்தலை சந்தித்து பா.ஜனதா அதை விடுத்து மக்களுக்காக செய்த திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் அவர்கள் மக்களுக்கு செய்திட்ட திட்டங்கள் ஒன்றுமில்லை. விவசாயிகளின் தற்கொலையில் அரசியல் செய்பவர்கள் பா.ஜனதாவினர். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு சிக்கல்களில் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். விளை பொருட்களுக்கு ஆதரவு விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு மக்களாகிய நீங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். காங்கிரசை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் நீங்கள் அமர்த்த வேண்டும்.

மனசாட்சிப்படி வாக்களியுங்கள்

உங்களின் குழந்தைகள் வாழ்க்கை வளம்பெற, அனைவருக்கும் ஆரோக்கிய திட்டம் கிடைத்திட, உங்கள் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்க, மத மற்றும் ஜாதி கலவரங்கள் இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழ்ந்திட நீங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் யாரையும் பார்த்து வாக்களிக்க வேண்டாம். உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்