கடவுள்தான் உங்களை தண்டித்தார் - வினேஷ் போகத்தை விமர்சித்த பிரிஜ் பூஷண்

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார் என்று பிரிஜ் பூஷன் சிங் கூறியுள்ளார்.

Update: 2024-09-07 09:54 GMT

புதுடெல்லி,

பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் இது தொடர்பாக கூறியதாவது: "ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்.

எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார். பெண்களை அவமதிக்கும் குற்றத்தை நான் செய்யவில்லை.

பெண்களை அவமதிக்கும் குற்றத்தை யாராவது செய்திருந்தால் அது பஜ்ரங்கும், வினேஷும் தான். மேலும் அதற்கு திரைக்கதை எழுதிய பூபேந்திர ஹூடாவும் பொறுப்பேற்க வேண்டும். கட்சி கேட்டுக்கொண்டால் ஹரியாணா தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன். ஹரியாணாவில் எந்த ஒரு பாஜக வேட்பாளரும் வினேஷ் போகத்தை எளிதில் தோற்கடிப்பார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்