மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்ற பா.ஜனதா கூட்டணி

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.

Update: 2024-09-07 07:34 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மாநிலங்களவையில் ( ராஜ்யசபா) பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. இது வக்பு (திருத்த) மசோதா போன்ற முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் பெற பா.ஜனதா கூட்டணிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய இடைத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலங்களவையின் பலம் 234 ஆக உள்ளது (மொத்த பலம் 12 நியமன உறுப்பினர்கள் உள்பட - 245). பா.ஜ.க. 96 உறுப்பினர்களுடன் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உள்ளது. தேசிய ஜனநாயக எம்.பி.க்களின் எண்ணிக்கை 113.

6 நியமன உறுப்பினர்கள், வழக்கமாக அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கிறார்கள், இதனால் தேசிய ஜனநாய கூட்டணி பலம் 119 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும்பான்மைக்கு தற்போது தேவையான 117ஐ விட இரண்டு அதிகம் ஆகும்.

மேல்சபையில் காங்கிரசுக்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளின் 58 உறுப்பினர்களை சேர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி எண்ணிக்கை 85 ஆக உள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், 7 உறுப்பினர்களைக் கொண்ட பி.ஜே.டி.யும் யாரையும் ஆதரிக்காமல் உள்ளனர்.

4 அதிமுக உறுப்பினர்கள், 3 சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இரண்டு அணியிலும் இணையவில்லை. மாநிலங்களவையில் மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் (4), ஆந்திர பிரதேசம் (4), நியமனம் (4), ஒடிசா (1).

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் இரண்டு உறுப்பினர்களும், பி.ஜே.டி.யின் ஒரு உறுப்பினரும் சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.களில் இருந்து விலகினர்.

பி.ஜே.டி. உறுப்பினர் -- சுஜீத் குமார் -- பி.ஜே.பி.யில் இணைந்தார், ஒடிசா சட்டமன்றத்தில் பலம் உள்ளதால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களான வெங்கடரமண ராவ் மற்றும் மஸ்தான் ராவ் ஆகியோர் கடந்த மாதம் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் ஆந்திராவில் ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்குதேசத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கும் இந்த 2 இடங்களிலும் தேசிய ஜனநாய கூட்டணியே வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பா.ஜனதா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் , தேசியவாத காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் , இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே), சிவசேனா, ராஷ்டிரிய லோக் தளம், தேசிய மக்கள் கட்சி, பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ் , ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்