மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் முறையீடு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

Update: 2023-08-02 07:18 GMT

டெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் களநிலவரத்தை ஆராய எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் கடந்த 30-ம் தேதி மணிப்பூர் சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட எம்.பி.க்கள் அம்மாநில கவர்னரையும் சந்தித்தனர். பின்னர், எம்.பி.க்கள் குழு டெல்லி திரும்பியது.

இந்நிலையில், மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிடைத்த தகவல்களையும், கள நிலவரத்தையும் அறிக்கையாக ஜனாதிபதியிடம் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்