கடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

திருப்பதி லட்டு சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

Update: 2024-09-20 11:16 GMT

விஜயவாடா,

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பொய் புகார் அளித்துள்ளார். கோவிலுக்கு வாங்கப்படும் நெய் உரிய பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்துவது கட்டாய நடைமுறை. வழக்கமாக திருப்பதி கோவிலுக்கு வாங்கப்படும் நெய் மூன்று முறை பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு 6 மாதமும் நெய் வாங்குவதற்கு ஆன்லைனில் டெண்டர் விடுவது வழக்கம். 6 மாத டெண்டரில் தரம்பார்த்து வாங்குவதில் நாங்கள் எதையும் மாற்றவில்லை ஒவ்வொரு டேங்கரில் வரும் நெய்யும் என்.ஏ.பி.எல் (NAPL) சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். 

இத்தனை சோதனைக்கு பிறகும் அனுமதிக்கப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை இல்லையா? திருப்பதி தேவஸ்தானத்தில் நாயுடு ஆட்சிக்காலத்தில் நெய்யை 15 முறை நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுடன் இயங்கி வரும் ஒரு உலகின் முதன்மையான கோவில் பற்றி ஒரு முதல்-மந்திரி இப்படி அவதூறு கூறலாமா? சந்திரபாபு நாயுடு தன்கற்பனைகளுக்கு இறக்கை கட்டி பறக்கவிடலாமா? ஜூலை 12 சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார். டெஸ்ட் எடுத்தபின் இத்தனை நாட்கள் சந்திரபாபு நாயுடு மவுனம் காத்தது ஏன்?

ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். திருப்பதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக பொய்யான புகாரை அவர் கூறுகிறார். கடவுளின் பெயரால் தற்போது அரசியல் செய்கின்றனர். சந்திரபாபு நாயுடு 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே நெய் கலப்பட புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. உணர்வுகளோடு சந்திரபாபு நாயுடு விளையாடுகிறார். வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்டவற்றை திசை திருப்ப முயல்கிறார். முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

எங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கு தரப்பட்டு வந்த உதவித்தொகை கூட தற்போது வழங்கப்படுவதில்லை. எங்கள் ஆட்சியில் வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது அதை நிறுத்திவிட்டனர். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். தர்மத்திற்கு எதிரான செயல்பாடுகள் நாயுடு ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகள் போடுவதையே முதன்மையாக கொண்டுள்ளார்.

மும்பையில் ஒரு நடிகை விவகாரத்தை கையில் எடுத்து அதை கூட திசை திருப்பினார் சந்திரபாபு நாயுடு. அரசியலுக்கு கூட கடவுளை எப்படி பயன்படுத்துவது என்ற தந்திரம் தெரிந்தவர் சந்திரபாபு நாயுடு. அவர் கூறும் அனைத்தும் கட்டுக்கதை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்