சித்தராமையா பயந்து விட்டார்... நான் அப்படியில்லை; டி.கே. சிவக்குமார் பேச்சால் புதிய சர்ச்சை

சித்தராமையா பயந்து விட்டார் என்றும் நான் அப்படியில்லை என்றும் டி.கே. சிவக்குமார் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-28 15:01 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானதில், காங்கிரஸ் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது உடனடியாக முடிவு செய்யப்படாமல் இருந்தது.

அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்த சித்தராமையா இடையே அதிகார போட்டி காணப்பட்டது.

இரு தலைவர்களும் டெல்லிக்கு சென்று கட்சி உயர்மட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினர். இதன்பின்னர், சித்தராமையாவை முதல்-மந்திரியாக கட்சி மேலிடம் அறிவித்தது. இதனால், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியானார்.

இதுபற்றி சிவக்குமார் கூறும்போது, நான் நேர்மறையான நபர். இதுவே தீர்ப்பு எனும்போது, அதனை ஏற்று கொள்ள வேண்டும் என கூறினார். எனினும், முதல்-மந்திரி பதவி கைவிட்டு போனது பற்றி அவ்வப்போது, தனது பேச்சில் குறிப்பிட்டார். இதுபற்றி பா.ஜ.க. கூறும்போது, கட்சிக்குள் விரிசல் தொடங்கி விட்டது என்றும் காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும் என்றும் கூறி வந்தது.

இந்த நிலையில், டி.கே. சிவக்குமார் கூறும்போது, முந்தின சித்தராமையா அரசில், அவர்கள் ஸ்டீல் பாலம் ஒன்றை கட்ட விரும்பினார்கள். ஆனால், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, சித்தராமையா பயந்து போய் விட்டார். திட்டத்தில் இருந்து அவர் பின்வாங்கி விட்டார் என கூறினார். நானாக இருந்திருந்தால் அந்த திட்டத்தினை முன்னெடுத்து சென்றிருப்பேன் என கூறினார்.

கடந்த 2017-ம் ஆண்டு பசவேஷ்வரா நகரில் இருந்து ஹெப்பல் வரையிலான ஸ்டீல் பறக்கும் சாலை திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனை குறிப்பிட்டே டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். இதனால், சித்தராமையாவுக்கு எதிராக அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்