சனாதன விவகாரம்; மக்கள் கோபம் எதிரொலியாக இந்தியா கூட்டணி பேரணி ரத்து: பா.ஜ.க.

சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட மக்களின் கோபம் எதிரொலியாக இந்தியா கூட்டணி பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.

Update: 2023-09-16 14:27 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியினர் ஒன்றுபட்டு பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த கூட்டணியின் பேரணி வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் திடீரென இன்று கூறினார். இதுபற்றி கட்சியின் தலைவர் கார்கே மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் எப்போது, எங்கே பேரணி நடைபெறும் என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்த பேரணி ரத்துபற்றி மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று பேசும்போது, இது பொதுமக்களின் கோபம். சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டு உள்ளது. டெங்கு, மலேரியா என அழைக்கப்பட்டு உள்ளது.

சனாதன தர்மத்திற்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை மத்திய பிரதேச மக்கள் சகித்து கொள்ளமாட்டார்கள். எங்களுடைய நம்பிக்கையை அவர்கள் புண்படுத்தி இருக்கிறார்கள் என இந்தியா கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வகையிலும் இதனை சகித்து கொள்ள முடியாது.

மத்திய பிரதேச மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் (இந்தியா கூட்டணியினர்) பயந்து போய் விட்டனர். அதனாலேயே அவர்கள் பேரணியை ரத்து செய்து விட்டனர். இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரசுக்கு எதிராக பொதுமக்களின் கோபம் உள்ளது. இதனை பொதுமக்கள் விட்டு விடமாட்டார்கள் என கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியின் தலைமைக்கு பலம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். போஸ்டர்களில் யார் புகைப்படம் இருக்க வேண்டும் என்பதற்காக பழமையான கட்சிக்குள் குழப்பமும், மோதலும் நிறைய காணப்படுகிறது. ஆனால் பா.ஜ.க.வில், தேர்தலின்போது ஒவ்வொருவரும் பணியாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்