பிரதமர் மோடி நாட்டுக்காக தியாகம் செய்கிறார்

ராமாயணத்தில் ஆஞ்சநேயா் தியாகம் செய்தது போல பிரதமர் மோடி நாட்டுக்காக தியாகம் செய்கிறார் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

Update: 2023-04-30 21:48 GMT

பெங்களூரு:-

யோகி ஆதித்யநாத் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை ெதாடங்கி உள்ளார். மேலும் மத்திய மந்திரிகள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள் கர்நாடகம் வந்து பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கொப்பல் மாவட்டம் கங்காவதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் அங்கு திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ'வும் நடத்தினார்.

இந்த பிரசாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

ஊழல் என்ஜின் அல்ல

மத்தியிலும், மாநிலத்திலும் இன்று இரட்டை என்ஜின் அரசு உள்ளது. இது மிக வேகமாக இயங்குகிறது. இந்த வேகத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. இன்று கர்நாடகம் வளரும் மாநிலமாக மாறி வருகிறது. கர்நாடகத்தின் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

உத்தரபிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசால் வளர்ச்சி பணிகள் தடையின்றி நடக்கிறது. உத்தரபிரதேசம் வளர்ச்சியடைந்து, அமைதியாக உள்ளது. இவை அனைத்தும் இரட்டை என்ஜின் அரசால் சாத்தியமானது. பா.ஜனதாவின் இரட்டை என்ஜின், காங்கிரசின் ஊழல் என்ஜின் அல்ல.

உலகின் சக்தி வாய்ந்த நாடு

காங்கிரஸ் திட்டங்களை மட்டுமே வகுத்துள்ளது. ஆனால் இரட்டை என்ஜின் அரசு அப்படியல்ல. பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இது இரட்டை என்ஜின் அரசின் சக்தி. நாங்கள் எதுவும் சொல்லவில்லை, செய்து காட்டுகிறோம்.

'மன் கி பாத்' மூலம் பிரதமர் மோடி பலரது இதயங்களுக்கு சென்றடைந்துள்ளார். இன்று நம் நாடு மாறிவிட்டது. உலகின் சக்தி வாய்ந்த நாடு இந்தியா. 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயத்ைதயொட்டி பிரதமர் மோடிக்கு யுனெஸ்கோ வாழ்த்து தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆஞ்சநேயர் தேசம்

பின்னர் ராய்ச்சூரில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத், 'துங்கா, கிருஷ்ணா நதிகள் பாயும் ஹரிதாசா மக்களுக்கு வணக்கம்' என்று கன்னடத்தில் பேச்சை தொடங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

அயோத்தியின் புனித பூமியில் இருந்து நான் இங்கு வந்துள்ளேன். உத்தரபிரதேசத்துக்கும், கர்நாடகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அனுமன் பிறந்த அனுமன் தேசத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் இந்த பணிகள் நிறைவடையும். அதன்பிறகு அயோத்தியின் புதிய தரிசனம் கிடைக்கும். ராமர் இல்லை என்று சொல்பவர்கள் ராமரை பற்றி பேசுகிறார்கள்.

நாட்டுக்காக தியாகம்

இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாத்தியமாகும். கொரோனா காலத்தில் 140 கோடி பேருக்கு மத்திய அரசு தடுப்பூசி போட்டுள்ளது. பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் 4 கோடி பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

மோடியின் தலைமையில் இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. ராமாயணத்தில் அனுமன் தியாகம் செய்தது போல் தற்காலத்தில் நாட்டுக்காக மோடி தியாகம் செய்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தலைகுனிந்து நடமாடினார்கள். பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.

உத்தரபிரதேச மக்கள் ஏன் எங்களை மிகவும் நேசிக்கிறார்கள். இது இரட்டை என்ஜின் அரசின் சாதனை. நாங்கள் பி.எப்.ஐ. அமைப்பை உடைத்துள்ளோம். மீண்டும் அந்த அமைப்பு தலை தூக்காது.

Tags:    

மேலும் செய்திகள்