அயோத்திக்கு வரவேண்டாம் - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
வரும் 22ம் தேதி அயோத்திக்கு வரவேண்டாமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது.
அதேவேளை, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரெயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அயோத்தி சென்றுள்ளார். அவர் அயோத்தி விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
வரும் 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரதிஷ்டை (ராமர் சிலை நிறுவுதல்) நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது. பாரம்பரியம், வளர்ச்சியின் வலிமை இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும். வரும் 22ம் தேதி பொதுமக்கள் அயோத்திக்கு வரவேண்டாம். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் பங்கேற்பார்கள். வரும் 14ம் தேதி நாடு முழுவதும் உள்ள மதவழிபாட்டுத்தலங்களை தூய்மைப்படுத்தும் பணியை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.