'தூக்கிலிடுவோம்... உயிருடன் தீ வைத்து எரிப்போம்' - அரசியல் கட்சி பேரணியில் மாற்று மதத்தினருக்கு எதிராக கோஷம் - கேரளாவில் பரபரப்பு

மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற அரசியல் பேரணியில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Update: 2023-07-26 11:46 GMT

திருவனந்தபுரம்,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையின் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலம் கசரக்கோடு மாவட்டம் கங்ஹங்கட் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நேற்று பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றனர். பேரணியின் போது இந்து மதத்தினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இந்து மத வழிபாட்டுத்தலம் முன் இந்துக்களை தூக்கிலிடுவோம், அவர்களை உயிருடன் எரிப்போம்' என்று கோஷம் எழுப்பப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதாக கங்ஹங்கட் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகி அப்துல் சலீமை கட்சியில் இருந்து நீக்குவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் பெரோஷ் தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்