மைசூரு திவானின் பேத்தியை கொன்ற 2-வது கணவர் விடுதலை செய்ய கோரிக்கை

மைசூரு திவானின் பேத்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 2-வது கணவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்டோரை காரணம் காட்டி தன்னையும் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-11-24 22:01 GMT

மைசூரு திவான் மிர்ஜா இஸ்மாயில்

பெங்களூரு: மைசூரு திவானின் பேத்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 2-வது கணவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்டோரை காரணம் காட்டி தன்னையும் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மைசூரு திவானின் பேத்தி

மைசூரு மன்னரிடம் திவானாக இருந்தவர் மிர்ஜா இஸ்மாயில். இவரது பேத்தி சகீரா. இவரது முதல் கணவர் அக்பர் கலீல். இவர், ஈரான் நாட்டு தூதராக இருந்தார். பெங்களூரு ரிச்மவுண்ட் ரோட்டில் சகீரா குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த 1983-ம் ஆண்டு சகீரா, டெல்லிக்கு சென்றிருந்த போது ஸ்ரத்தானந்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அவர் மீது சகீராவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக ஸ்ரத்தானந்தாவை பெங்களூருவுக்கு அழைத்து வந்தார்.

பின்னர் சகீராவும், ஸ்ரத்தானந்தாவும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 1986-ம் ஆண்டு அக்பர் கலீலை விவாகரத்து செய்துவிட்டு, ஸ்ரத்தானந்தாவை சகீரா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார். மேலும் தனக்கு சொந்தமான ரூ.6 ஆயிரம் கோடிக்கு சொத்துகளுக்கும் பொறுப்பாளராக ஸ்ரத்தானந்தா இருப்பார் என்றும் சகீரா தெரிவித்திருந்தார்.

உயிருடன் புதைத்து கொலை

இந்த சொத்துகளை அடைய விரும்பிய ஸ்ரத்தானந்தா, சகீராவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி தனது வீட்டின் படுக்கை அறையிலேயே பெரிய குழியை தோண்டினார். பின்னர் சகீராவுக்கு மயக்க மாத்திரைகளை கொடுத்து, அவரை ஒரு பெட்டிக்குள் வைத்து உயிருடன் ஸ்ரத்தானந்தா புதைத்து கொலை செய்திருந்தார். சகீரா கொலை செய்யப்பட்டது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது.

சகீரா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் தொடர்பில் இருந்து வந்தார். ஆனால் 1991-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து சகீரா பேசாமல் இருந்தாலும், அவரை பற்றிய தகவல் கிடைக்காததாலும் மூத்த மகள் சபா, ஸ்ரத்தானந்தாவிடம் தாய் பற்றி கேட்டுள்ளார். சகீரா வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக ஸ்ரத்தானந்தா கூறி இருந்தார். சந்தேகம் அடைந்த சபா கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சகீராவை காணவில்லை என்று புகார் அளித்தார்.

4 ஆண்டுக்கு பின்பு அம்பலம்

போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனது மனைவி வெளிநாட்டுக்கு சென்றதாக ஸ்ரத்தானந்தா கூறி வந்தார். பின்னர் இந்த வழக்கு 1994-ம் ஆண்டு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் சகீராவை கொலை செய்ததை ஸ்ரத்தானந்தா ஒப்புக் கொண்டார். தனது மனைவியை உயிருடன் புதைத்து கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, ஸ்ரத்தானந்தா கைது செய்யப்பட்டார்.

அதாவது 1991-ம் ஆண்டு சகீரா கொலை செய்யப்பட்டாலும், அதுபற்றிய தகவல் 1994-ம் ஆண்டு தான் அம்பலமானது. அதுவரைக்கும் சகீரா என்ன ஆனார் என்பது குறித்து போலீசாரும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர்.

29 ஆண்டுகளாக சிறை

ஸ்ரத்தானந்தா கூறியபடி வீட்டில் உள்ள படுக்கை அறையில் குழியை தோண்டிய போது சகீராவின் எலும்பு கூடுகள் சிக்கியது. இந்த கொலை சம்பவம் கடந்த 1994-ம் ஆண்டு பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சகீராவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை அடைவதற்காக, 2-வது கணவரான ஸ்ரத்தானந்தா தீர்த்து கட்டியது விசாரணையில் உறுதியானது.

இந்த வழக்கில் சகீராவை சொத்துக்காக கொலை செய்ததாக 2-வது கணவர் ஸ்ரத்தானந்தாவுக்கு கோர்ட்டு முதலில் மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்படி, கடந்த 29 ஆண்டுகளாக ஸ்ரத்தானந்தா சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி உள்பட 6 பேரையும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் நளினி உள்ளிட்டோர் விடுதலை செய்ததை மேற்கோள் காட்டி, மைசூரு திவானின் பேத்தியான சகீரா கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 2-வது கணவர் ஸ்ரத்தானந்தாவும் தன்னை விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு விடுதலை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்