மணிப்பூர்: ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

அவரிடம் 1.137 கிலோ எடை கொண்ட டபிள்யூ.ஒய். வகையை சேர்ந்த போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.

Update: 2024-01-07 01:28 GMT

ஜிரிபம்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா தீவிரப்படுத்தி உள்ளார். அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தலை தடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எல்லை பகுதிகளில் போதை பொருள் கடத்தல் தொடர்கிறது என்று வந்த உளவு தகவலை அடுத்து, மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அசாம் ரைபிள் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 1.137 கிலோ எடை கொண்ட டபிள்யூ.ஒய். வகையை சேர்ந்த போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை பகுதியருகே நடந்த சோதனையின்போது, நபர் ஒருவரிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும். பிடிபட்ட அந்நபர் பின்னர் ஜிரிபம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்