ரெயில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பு

ரெயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த நபருக்கு இப்படி ஒரு துயர சம்பவம் ஏற்பட்டு உயிர் போயுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-12-03 06:11 GMT

கான்பூர்

பொதுவாக இந்தியாவில் மக்கள் பேருந்தை பேருந்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் படுக்கை, இருக்கை, கழிவறை, உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும். மேலும் இது நடுத்தர மக்களுக்கு மிகவும் எளிய முறையில் கையாள முடிகிறது.

இதனால் நாட்டில் பலர் ரெயில் பயணத்துக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களுக்கு ஜன்னலோர சீட்டையே நாடுவர். ஏனெனில் அங்கு இருந்தால் தான், நல்ல காற்றும், சுற்றி வேடிக்கை பார்க்க வசதியாகவும் இருக்கும் என்று கருதுகின்றனர். அதே போல் ரெயிலில் விபத்துகள் ஏற்படுவதும் மிக குறைவு தான்.

ரெயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த பயணித்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து கான்பூருக்கு செல்லும் நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஹரிகேஷ் குமார் என்ற பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்த ரெயில் பிரக்யாராஜ் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கம்பி ஒன்று ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. பாய்ந்த கம்பி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஹரிகேஷ் குமார் கழுத்தில் சட்டென்று பாய்ந்தது. இந்த கோர சம்பவத்தில் ஹரிகேஷ் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கழுத்தில் கம்பி பாய்ந்த நிலையில் ஹரிகேஷ் குமாரை கண்ட சக பயணிகள் உடனே அலறியடித்து ரெயிலை நிறுத்தினர். மேலும் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த அவர்கள் ஹரிகேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த கோர சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ஹரிகேஷ் குமார் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பியானது தண்டவாளத்தில் கிடந்திருக்கலாம். அப்போது அந்த கம்பியின் மீது வேகமாக வந்த ரெயிலின் சக்கரம் ஏறியபோது, கம்பி உள்ளே பாய்ந்திருக்க வாய்ப்புள்ளது" என்றனர். எனினும் அந்த கம்பி எப்படி பாய்ந்து உள்ளே சென்றது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்