ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள், மாநிலத்தையே மாற்றி காட்டுகிறேன்: கெஜ்ரிவால்
அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சண்டிகர்,
அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா பக்கமும் தன் கவனத்தை கெஜ்ரிவால் திருப்பியுள்ளார். ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், ஆதம்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால் கூறியதாவது; மாநிலத்தில் வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க இந்த ஆதம்பூர் இடைத்தேர்தல் ஒரு நுழைவு வாயில் போன்றது. இந்த இடைத் தேர்தல் மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் ஆகும். ஆம் ஆத்மி இந்த இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். என்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றால் என்னை நீங்களே தூக்கி எறிந்துவிடுங்கள்" என்றார்.
ஆதம்பூர் தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் பிஸ்னாய் அவரது பதவியில் இருந்து விலகியதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.