கர்நாடக மாநில 9-வது சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்

கர்நாடக மாநில 9-வது சட்டசபை தேர்தல் பற்றி இங்கு காண்போம்.

Update: 2023-04-06 20:05 GMT

பெங்களூரு:

கடந்த 1985-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 139 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலில் ராமகிருஷ்ண ஹெக்டே 3 வருடம் 153 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். அவருக்கு பின்னர் எஸ்.ஆர்.பொம்மை 281 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இந்த நிலையில் 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஜனதா கட்சியின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே எஸ்.ஆர்.பொம்மை பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கலைக்கப்பட்டது.

இதனால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 8-வது சட்டசபை கலைக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தின் 9-வது சட்டசபைக்கு 24-11-1989 அன்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு முன்பு ஜனதா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனால் ஜனதாதளம், ஜனதா கட்சி (ஜே.பி.) என இரு அணிகள் தேர்தலில் களமிறங்கின. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 221 தொகுதிகளிலும், ஜனதாதளம் கட்சி 209 தொகுதிகளிலும், பா.ஜனதா கட்சி 118 தொகுதிகளிலும், ஜனதா கட்சி (ஜே.பி.) அணி 217 தொகுதிகளிலும், கர்நாடக விவசாயிகள் சங்கம் 105 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும், முஸ்லிம் லீக் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 36 ஆயிரத்து 304 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 1 கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 461 ஆண்களும், 1 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 552 பெண்களும் என மொத்தம் 2 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்க தகுதி படைத்திருந்தனர். இருப்பினும் மொத்தம் 67.57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதாவது 1 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 972 ஆண்களும், 89 லட்சத்து 60 ஆயிரத்து 70 பெண்களும் என மொத்தம் 1 கோடியே 93 லட்சத்து 40 ஆயிரத்து 42 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர்.

இதில் 178 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் கர்நாடக சட்டசபை வரலாற்றில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதாதளம் கட்சி 24 இடங்களிலும், பா.ஜனதா 4 இடங்களிலும், ஜனதா கட்சி (ஜே.பி.) 2 இடங்களிலும், கர்நாடக விவசாயிகள் சங்கம் 2 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றியை பதிவிட்டன. 224 தொகுதிகளில் மொத்தம் 1,088 சுயேச்சைகள் களமிறங்கினர். ஆனால் 12 இடங்களில் மட்டுமே சுயேச்சைகள் வெற்றி சாத்தியமானது. இந்த தேர்தலில் மொத்தம் 1,964 ஆண் வேட்பாளர்களும், 79 பெண் வேட்பாளர்களும் களமிறங்கினர். இருப்பினும் ஆண் வேட்பாளர்களில் 214 பேரும், பெண் வேட்பாளர்களில் 10 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.

178 தொகுதிகளை கைப்பற்றிய இந்திய தேசிய காங்கிரசின் முதல்-மந்திரியாக வீரேந்திரபட்டீல் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே வீரேந்திர பட்டீல் 1968-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி முதல் 1971-ம் ஆண்டு மார்ச் 18-ந்தேதி வரை முதல்-மந்திரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2-வது தடவையாக முதல்-மந்திரியாக 1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி பொறுப்பு ஏற்றார். அந்த சமயத்தில் நிதிநிலை மோசமாக இருந்தது. இதனால் நிதிமந்திரியாக இருந்த ராஜசேகர மூர்த்தியும், வீரேந்திர பட்டீலும் இணைந்து கர்நாடகத்தில் மதுபானம் மீதான வரியை 2-ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தினர்.

இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் உயர்ந்தது. இதற்கு அவரது கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி உத்தரவின் பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக சரகொப்பா பங்காரப்பா பதவி ஏற்றார். இவரும் 17-10-1990 முதல் 19-11-1992 வரை மட்டுமே முதல்-மந்திரியாக நீடித்தார். அதன் பின்னர் அவரும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து 9-வது சட்டசபையின் 3-வது முதல்-மந்திரியாக வீரப்பமொய்லிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்