முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் லஞ்சம் கொடுத்தவர்களிடம் விசாரணை

பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. லஞ்ச வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களிடம் விசாரணைக்கு அனுமதி வழங்கியதுடன், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-30 21:50 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.

பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்சப்பா. இவரது மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் கடந்த ஆண்டு (2022) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய போது லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. மாடால் விருபாக்சப்பாவும் லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

அதே நேரத்தில் பிரசாந்திடம் லஞ்சம் கொடுத்த 5 பேரையும் போலீசார் கைது செய்திருந்தார்கள். அதாவது மைசூரு சோப் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்வதற்கான டெண்டர் எடுப்பதற்காக 5 பேரும் லஞ்சம் கொடுத்திருந்தனர். இதையடுத்து, கைதான 7 பேர் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கை ரத்து செய்ய மறுப்பு

இந்த நிலையில், மாடால் விருபாக்சப்பா மகனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கைதான 5 பேரும், தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 5 பேர் மீதும் பதிவான வழக்கை ரத்து செய்யும்படியும், இந்த வழக்கில் அவர்கள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனால் கைதான 5 பேர் மீதும் பதிவான வழக்கை ரத்து செய்ய நீதிபதி நாக பிரசன்னா மறுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் நீதிபதி கூறுகையில், லஞ்சம் கேட்டவர்கள் மீது விசாரணை நடத்துவது போல், லஞ்சம் கொடுத்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். அதற்கு கடிவாளமும் போட முடியும். எனவே இந்த விவகாரத்தில் கைதான 5 பேர்மீதும் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர்கள் மீது லோக் அயுக்தா போலீசார் உரிய விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்