சிக்கமகளூருவில்உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14½ லட்சம் பறிமுதல்
சிக்கமகளூரு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ேம) 10-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 24 மணி நேர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சிக்கமகளூரு- கடூர் அரிசிகெரே பசவனதிப்பா சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து கடூர் நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
ரூ.9½ லட்சம் சிக்கியது
அதில் ரூ.9½ லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் காரில் இருந்த நபரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் ரூ.9½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து விட்டு ரூ.9½ லட்சம் ரொக்கத்தை வாங்கி விட்டு செல்லும்படி போலீசார் கூறினர். சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூரில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல்
மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ. 61 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல மூடிகெரே சோதனை சாவடியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது. என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூரில் மோட்டார் சைக்கிளில் 4 லிட்டர் மதுபானங்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுபானம் பறிமுதல்
மேலும் 4 லிட்டர் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர். சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.14½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.