சிக்கமகளூரு நகரில்கூரியர் அலுவலகத்தில் ரூ.7½ லட்சம் ஜீன்ஸ் பேண்டுகள் பறிமுதல்

சிக்கமகளூரு நகரில் கூரியர் அலுவலகத்தில் ரூ.7½ லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு நகரில் கூரியர் அலுவலகத்தில் ரூ.7½ லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ேம) 10-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் அமலில் உள்ளது. பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிக்கமகளூரு புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாக்ரா கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4½ லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் காரில் வந்தவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் ரூ.4½ லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிக்சி, குக்கர் பறிமுதல்

கடூர் டவுன் பகுதியில் உள்ள ஒரு லாரி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக குக்கர், மிக்சிகள் பதுக்கி வைத்திருப்பதாக கடூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த மிக்சி, பேன், குக்கர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.7½ லட்சம் ஜீன்ஸ் பேண்டுகள்

அதேபோல தரிகெரே தாலுகா எம்.என்.கேம்ப் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் டேங்க் கவரில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சிக்கமகளூருவில் உள்ள கூரியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பண்டல்களில் சோதனை செய்தனர். அதில் ஜீன்ஸ் பேண்டுகள் இருந்தது. வடமாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. ஆனால் அனுப்பியவரின் பெயர் இல்லை. இதையடுத்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.5½ லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான குக்கர், மிக்சிகள், ரூ.7½ லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்