டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

Update:2023-09-09 00:34 IST
Live Updates - Page 5
2023-09-09 02:19 GMT

ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசல் அலங்கரிப்பு

ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசலில், ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான மலர்கள் மற்றும் விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 

2023-09-08 23:14 GMT

அமெரிக்க நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் யெல்லனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

இருவரும் ஜி-20 மாநாட்டின் முன்னுரிமைகள் குறித்தும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். அதேபோல் நைஜீரியா நாட்டின் நிதி மற்றும் பொருளாதார மந்திரி அடேபாயோ ஒலவாலே எடுனையும் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2023-09-08 22:17 GMT

ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு : இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பிரதிபலிக்கும்


ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஜி-20 மாநாடு

இந்தியா, ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடக்கிறது.

ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அங்கு நிறைய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கண்டுகளிக்கலாம்.

‘கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்ப திட்டங்கள்

பாரத் மண்டபத்தின் 4 மற்றும் 14-ம் எண் அறைகளில், ‘டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப திட்டங்களின் அனுபவத்தை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கியமான முன்முயற்சிகள், ஆதார், டிஜிலாக்கர், யு.பி.ஐ., இசஞ்சீவானி, திக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி., ஆஸ்க் கீதா ஆகிய திட்டங்களின் சிறப்பம்சங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளன.

கோவின் இணையதளம்

மேலும், மைகவ், கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ‘கோவின்’ இணையதளம் மற்றும் ஜன்தன், இ-நாம், ஜி.எஸ்.டி.என், பாஸ்டேக் போன்ற முக்கியமான தொழில்நுட்ப திறன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம், யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு, ருபே உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில், பண பரிமாற்றத்துக்காக, ‘யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கைவினை பொருள் பஜார்

இதுதவிர, ‘கைவினை பொருள் பஜார்’ என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயாரிப்புகள், கதர் கிராம தொழில் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் தயாரிப்புகளை அதில் பார்க்கலாம்.

ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்காக இந்த கைவினை பொருள் பஜார் அமைக்கப்பட்டுள்ளது.

2023-09-08 21:44 GMT

‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக மாற்றினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

2023-09-08 20:51 GMT

‘பூங்காவனமாய்’ மாறிய புதுடெல்லி: மரங்களில் மலர் அலங்காரம்

*‘ஜி-20’ மாநாட்டையொட்டி தலைநகர் டெல்லி பூங்காவனமாய் மாறியிருக்கிறது.

மரங்கள் எல்லாம் பூக்களாய் மலர்ந்திருக்கின்றன. ஆனால் இயற்கையாய் பூத்த பூக்கள் அல்ல. சாமந்தி, செவ்வந்தி, டெய்சி என பல வண்ணப் பூக்கள் டெல்லியின் சர்தார் படேல் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்து 200 மரங்களை டெல்லி மாநகராட்சி இவ்வாறு அலங்கரித்துள்ளது.

* ஜி-20 இலச்சினை, அதன் முத்திரை வாக்கியமான ‘வசுதைவ குடும்பகம்-ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’-மும் மலர்களை கொண்ட மலர்த்தட்டிகளில் உருவாக்கப்பட்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பன்னாட்டு மொழிகளில்...

* ‘வருக’ என்பதும், ‘வசுதைவ குடும்பகம்’ என்பதும் ஜி-20 நாடுகளின் மொழிகளில் ஆங்காங்கே வரவேற்பு பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஜெர்மன் முதல் ஸ்பானிஷ் வரையிலான பல மொழி பலகைகளை தலைநகரில் காணமுடிகிறது.

மாமல்லபுரம் சிற்பங்கள்

*மாநாட்டு மைதானத்தில் இந்திய பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பூம்புகார் கழகம் சார்பிலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பலவகை கைத்தறி துணி வகைகள், பல்வேறு தொன்மைப் பொருட்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மரவேலைப்பாட்டு பொருட்கள், நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை, கலை தட்டுக்கள், ஓவியங்கள், பத்தமடை பாய்கள், வடசேரி கோவில் நகைகள் மற்றும் மயிலாடி கல் பொருட்கள் போன்றவை இடம்பெற்று உள்ளன.

வெடிகுண்டு புரளி

*வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்த ஓர் ஆட்டோ, ஜி-20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் நோக்கிச் செல்கிறது என்று ஒருவர், சமூக வலைதளத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பினார். அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், நேற்று அந்த நபரை தேடிக் கண்டுபிடித்து, கைது செய்தனர்.

2023-09-08 20:08 GMT

ஜனாதிபதி விருந்தில் இடம்பெறும் உணவு பதார்த்தங்கள்

ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். விருந்தில், இந்தியாவில் மழைக்காலத்தில் சாப்பிடும் உணவு பண்டங்களை மனதில் வைத்து, விசேஷமான உணவு தயாரிக்கப்படும். சிறுதானிய உணவு வகைகளும் இடம்பெறும்.

குலோப் ஜாமுன், ரசமலாய், ஜிலேபி போன்ற இனிப்புவகைகளும் பரிமாறப்படும். வெளிநாட்டு பிரதிநிதிகள் மறக்க முடியாத சுவையுடன் செல்லும்வகையில், உணவுவகைகள் இருக்கும்.

உணவு வகைகள் அனைத்தும் வெள்ளி பாத்திரங்களில் பரிமாறப்படும். குளிர்பானம் கொடுக்கும் தட்டுகள், தங்க முலாம் பூசியதாக இருக்கும்.

2023-09-08 19:22 GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் எவை?

ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மேலும் வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களை தவிர ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற ஏராளமான சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ளனர்.

2023-09-08 19:08 GMT

டெல்லியில் ஜோ பைடன் - மோடி சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

புதுடெல்லி,

உலகின் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வல்லரசுகளும், வளர்ந்த நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.

தலைமை பதவியில் இந்தியா

உலக அளவில் 85 சதவீத ஜி.டி.பி., 75 சதவீத வர்த்தகத்தை இந்த நாடுகள் கொண்டிருக்கின்றன. இதைப்போல உலக மக்கள் தொகையில் 3-ல் 2 பங்கு பேர் இந்த நாடுகளில் வசித்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து முக்கிய முடிவுகளை இந்த அமைப்பு எடுத்து வருகிறது.

இவ்வாறு கவுரவம் மிகுந்த இந்த அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. எனவே இந்த அமைப்பு தொடர்பான கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தன.

இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வந்தனர். இந்த கூட்டங்களின் இறுதியில் அமைப்பின் வளர்ச்சி சார்ந்த தீர்மானங்களும், பிரகடனங்களும் வெளியிடப்பட்டு வந்தன.

ஜி-20 உச்சி மாநாடு

ஜி-20 அமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள், வளர்ச்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முத்தாய்ப்பு நிகழ்வான உச்சி மாநாடு, டெல்லியில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டுக்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.

குறிப்பாக டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கு இதற்காக புதுப்பிக்கப்பட்டு உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டது.

அத்துடன் கண்காட்சி, கலாசார நிகழ்வுகளுக்காக ஏராளமான அரங்குகளும் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

பிரமாண்ட ஏற்பாடுகள்

21-ம் நூற்றாண்டில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் இந்த வேளையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சாலைகள், வீதிகள், கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் என பார்க்கும் இடமெல்லாம் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு உள்ளன.

சாலைகள், சந்திப்புகள் என முக்கிய பகுதிகள் அனைத்திலும் தொட்டிகளில் பூஞ்செடிகள் வளர்த்து அழகு சேர்க்கப்பட்டு உள்ளன. ஓவியங்கள், மாநாட்டு லோகோக்களின் படங்களால் சுவர்கள் மெருகூட்டுப்பட்டு இருக்கின்றன.

கைவினைப்பொருட்கள், சிலைகள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கட்டிடங்களால் டெல்லி நகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று தொடங்குகிறது

இவ்வாறு கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜி-20 உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்துகிறார்.

இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

மேலும் உக்ரைன் போரின் எதிரொலியாக நிகழ்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதைத்தவிர வறுமை மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வதற்காக உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் புத்தாக்கம், பருவநிலை நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜோ பைடன் வந்தார்

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா ஏற்கனவே அழைப்பு விடுத்தது.

இதைப்போல ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள், வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவும் அழைப்பிதழ் அனுப்பியது.

இந்தியாவின் இந்த அழைப்பை ஏற்று இந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

பின்னர் அங்கிருந்து நேராக பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்ற ஜோ பைடன், அவருடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு நடத்தினர்.

மேலும் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

அத்துடன் விசா நடைமுறைகளை தளர்த்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப்போல மொரீஷியஸ், வங்காளதேசம் போன்ற நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

உலக தலைவர்கள் வருகை

முன்னதாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும், கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி வந்தடைந்தனர்.

மேலும் ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ரஷியா சார்பில் கலந்து கொள்ளும் வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் தலைநகரை அடைந்தனர்.

இவர்களைத்தவிர ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டலினா, ஜார்ஜீவா உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.

ஜி-20 மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இந்த வரவேற்பில் இடம் பெற்றன.

உச்சக்கட்ட பாதுகாப்பு

வல்லரசு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ராணுவம் மற்றும் போலீசார் என 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாநாடு நடைபெறும் அரங்கம் மற்றும் தலைவர்கள் தங்கும் விடுதிகள் அனைத்தும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளன.

விமானப்படையும் இந்த பாதுகாப்பு பணிகளில் களமிறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பயனுள்ள சந்திப்பு

இந்த நிலையில் பிரதமர் மோடி-ஜோ பைடன் இடையேயான சந்திப்பின்போது இரு நாடுகள் மற்றும் சர்வதேச நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் உரையாடல்கள் இடம்பெற்றதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எனது இல்லத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது’ என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேம்படுத்தும் பல அம்சங்களை எங்களால் விவாதிக்க முடிந்தது. நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்’ என்றும் நம்பிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஜி20  உச்சிமாநாட்டின் நேற்றைய நிகழ்வுகள் குறித்து மேலும் படிக்க:-  ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி


Tags:    

மேலும் செய்திகள்