டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பள்ளிகளுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் மீண்டும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.