சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.;
ராய்ப்பூர்,
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
அந்த வகையில், சத்தீஷ்காரில் உள்ள சுக்மா-பிஜாப்பூர் எல்லையின் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை வெடித்தது. தற்போதுவரை இந்த மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.