டெல்லி சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மிக்கு உத்தவ் சிவசேனா ஆதரவு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா ஆதரவு அளித்து உள்ளது.;
மும்பை,
டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதற்கு முன்பு உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்று உள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் அறிவித்து உள்ளன.
இந்தநிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவும் ஆதரவு அளித்து உள்ளது. இதுகுறித்து டெல்லியில் அந்த கட்சியின் எம்.பி. அனில் தேசாய் கூறுகையில், " மராட்டிய சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலலைமையிலான ஆம் ஆத்மி எங்களுக்கு ஆதரவாக இருந்தது. எனவே நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கிறோம். " என்றார்.இதேபோல அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவரை காங்கிரஸ் கட்சி துரோகி என கூறுவது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக உத்தவ் தாக்கரே எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.