'எமர்ஜென்சி' படம் பார்க்க அழைப்பு; ராகுல், பிரியங்காவின் பதில் குறித்து கங்கனா ரனாவத் பேட்டி

‘எமர்ஜென்சி’ படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார்.;

Update:2025-01-10 02:49 IST

புதுடெல்லி,

இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட 'எமர்ஜென்சி' பிரகடனத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்த நிலையில், படத்தில் சீக்கியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.

தொடர்ந்து சென்சார் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு வந்தது. பின்னர் சில காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், 'எமர்ஜென்சி' திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது. இந்த படம் வரும் 17-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை பார்ப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு அவர்கள் அளித்த பதில் குறித்து கங்கனா ரனாவத் கூறுகையில், "பிரியங்கா காந்தியை நான் படம் பார்க்க அழைத்தபோது அவர் சிரித்துக்கொண்டே பார்க்கலாம் என பதிலளித்தார்.

அவருடன் நான் பேசியது அழகான உரையாடலாக அமைந்தது. அது எனக்கு இனிமையான நினைவாக இருக்கும். அவரது சகோதரரைப் போல் இல்லாமல், பிரியங்கா காந்தி மிகவும் கண்ணியமானவர், விவேகமானவர். தான் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுகிறார். அவரது பேச்சை நான் ரசித்தேன்.

அதே சமயம் ராகுல் காந்தியையும் நான் 'எமர்ஜென்சி' படத்திற்கு அழைத்தேன். ஆனால் அவர் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிட்டார். அவரது நடத்தையில் மரியாதை இல்லை" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்