அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.;

Update:2025-01-09 23:52 IST

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 21-ந்தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) சமூக வலைதளத்தில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பை மேம்படுத்தவும் அறிவுறுத்தினர்.

இந்ர்க நிலையில், சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்