40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை" – விமானப்படை தளபதி ஏபி சிங்

எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பத்தில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இது சிக்கலை ஏற்படுத்துகிறது என்று விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.;

Update:2025-01-09 15:01 IST

புதுடெல்லி,

'உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு, 2010ல் ஒப்பந்தம் செய்தும் இன்னும் கிடைக்கவில்லை,'' என, விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த, 21வது சுப்ரதோ முகர்ஜி நினைவு கருத்தரங்கில், விமானப்படை தளபதி ஏ.பி. சிங் கூறியதாவது:

சீனா சமீபத்தில் ஆறாவது தலைமுறை போர் விமானத்தை பரிசோதித்துள்ளது. உலகிலேயே, ஆறாவது தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ள முதல் நாடாக நம் அண்டை நாடான சீனா உள்ளது. நம் நாட்டில், ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதற்கான வடிவமைப்பு முயற்சிகள் சமீபத்தில்தான் துவங்கியுள்ளன. எண்ணிக்கையில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ள நிலையில், எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பத்தில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இது சிக்கலை ஏற்படுத்துவதால் நம் விமானப் படைக்கு போதிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் தேவை.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கிறது. கடந்த ஆண்டு 1984ல் இந்த விமானத்தை உருவாக்குவதற்கான முயற்சி துவங்கியது. அதற்கு, 17 ஆண்டுகளுக்குப் பின், 2001ல் தான் முதல் தேஜஸ் போர் விமானம் பறந்தது. அதற்கு, 15 ஆண்டுகளுக்குப் பின், 2016ல் தான், முதல் தேஜஸ் போர் விமானம், விமானப் படையில் சேர்ந்தது. இதற்கிடையே, 2010ல், 40 தேஜஸ் போர் விமானங்கள் வாங்குவதற்காக தனியாக ஒரு ஒப்பந்தம் செய்தோம். ஆனால், 15 ஆண்டுகளாகியும், இதுவரை, ஒரு போர் விமானம் கூட வந்து சேரவில்லை.

இதுதான் நம் நாட்டின் உற்பத்தி திறனாக உள்ளது. இதை மேம்படுத்துவதற்கு, தனியார் துறையினரை அதிகளவில் இதில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் போட்டி ஏற்படும்; உற்பத்தி அதிகரிக்கும். தொழில்நுட்பம் தாமதம் என்பது தொழில்நுட்பம் மறுப்பாகவே இருக்கும். அதனால், தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், உற்பத்தியையும் நாம் வேகப்படுத்த வேண்டும். விமானம், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொள்ள அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்