உ.பி. மகா கும்பமேளா ரூ.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.;

Update:2025-01-09 07:57 IST

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இந்நிலையில், தெய்வீக உத்தர பிரதேசம்:  நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் என்றார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், இந்தியாவின் ஆன்மீக வேர்கள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன என கூறிய அவர், நாடு பெருமையுடனான பாரம்பரியத்தினை தழுவுவதற்காக உத்வேகம் ஏற்படுத்திய பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டினார்.

2024-ம் ஆண்டு, 16 கோடி பக்தர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தனர். ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அயோத்திக்கு 13.55 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் வந்தனர் என கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டில் மகா கும்பமேளாவால் ரூ.1.2 லட்சம் கோடி வருவாய் மாநிலத்திற்கு கிடைத்தது. இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்