திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி, கெஜ்ரிவால் இரங்கல்

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-01-09 04:36 IST

திருப்பதி,

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகிய 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதியில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். இந்த கடினமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதி கோவிலில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த ஆன்மாக்களுக்கு கடவுள் அவரது பாதங்களில் இடம் கொடுப்பாராக. காயமடைந்த பக்தர்கள் விரைவில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்