டெல்லியில் ஜோ பைடன் - மோடி சந்திப்பு - முக்கிய... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
டெல்லியில் ஜோ பைடன் - மோடி சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
புதுடெல்லி,
உலகின் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வல்லரசுகளும், வளர்ந்த நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.
தலைமை பதவியில் இந்தியா
உலக அளவில் 85 சதவீத ஜி.டி.பி., 75 சதவீத வர்த்தகத்தை இந்த நாடுகள் கொண்டிருக்கின்றன. இதைப்போல உலக மக்கள் தொகையில் 3-ல் 2 பங்கு பேர் இந்த நாடுகளில் வசித்து வருகின்றனர்.
சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து முக்கிய முடிவுகளை இந்த அமைப்பு எடுத்து வருகிறது.
இவ்வாறு கவுரவம் மிகுந்த இந்த அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. எனவே இந்த அமைப்பு தொடர்பான கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தன.
இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வந்தனர். இந்த கூட்டங்களின் இறுதியில் அமைப்பின் வளர்ச்சி சார்ந்த தீர்மானங்களும், பிரகடனங்களும் வெளியிடப்பட்டு வந்தன.
ஜி-20 உச்சி மாநாடு
ஜி-20 அமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள், வளர்ச்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முத்தாய்ப்பு நிகழ்வான உச்சி மாநாடு, டெல்லியில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டுக்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.
குறிப்பாக டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கு இதற்காக புதுப்பிக்கப்பட்டு உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டது.
அத்துடன் கண்காட்சி, கலாசார நிகழ்வுகளுக்காக ஏராளமான அரங்குகளும் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
பிரமாண்ட ஏற்பாடுகள்
21-ம் நூற்றாண்டில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் இந்த வேளையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சாலைகள், வீதிகள், கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் என பார்க்கும் இடமெல்லாம் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு உள்ளன.
சாலைகள், சந்திப்புகள் என முக்கிய பகுதிகள் அனைத்திலும் தொட்டிகளில் பூஞ்செடிகள் வளர்த்து அழகு சேர்க்கப்பட்டு உள்ளன. ஓவியங்கள், மாநாட்டு லோகோக்களின் படங்களால் சுவர்கள் மெருகூட்டுப்பட்டு இருக்கின்றன.
கைவினைப்பொருட்கள், சிலைகள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கட்டிடங்களால் டெல்லி நகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று தொடங்குகிறது
இவ்வாறு கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜி-20 உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்துகிறார்.
இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
மேலும் உக்ரைன் போரின் எதிரொலியாக நிகழ்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதைத்தவிர வறுமை மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வதற்காக உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் புத்தாக்கம், பருவநிலை நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோ பைடன் வந்தார்
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா ஏற்கனவே அழைப்பு விடுத்தது.
இதைப்போல ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள், வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவும் அழைப்பிதழ் அனுப்பியது.
இந்தியாவின் இந்த அழைப்பை ஏற்று இந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.
பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
பின்னர் அங்கிருந்து நேராக பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்ற ஜோ பைடன், அவருடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு நடத்தினர்.
மேலும் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
அத்துடன் விசா நடைமுறைகளை தளர்த்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைப்போல மொரீஷியஸ், வங்காளதேசம் போன்ற நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
உலக தலைவர்கள் வருகை
முன்னதாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும், கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி வந்தடைந்தனர்.
மேலும் ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ரஷியா சார்பில் கலந்து கொள்ளும் வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் தலைநகரை அடைந்தனர்.
இவர்களைத்தவிர ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டலினா, ஜார்ஜீவா உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
ஜி-20 மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இந்த வரவேற்பில் இடம் பெற்றன.
உச்சக்கட்ட பாதுகாப்பு
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ராணுவம் மற்றும் போலீசார் என 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
மாநாடு நடைபெறும் அரங்கம் மற்றும் தலைவர்கள் தங்கும் விடுதிகள் அனைத்தும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளன.
விமானப்படையும் இந்த பாதுகாப்பு பணிகளில் களமிறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பயனுள்ள சந்திப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி-ஜோ பைடன் இடையேயான சந்திப்பின்போது இரு நாடுகள் மற்றும் சர்வதேச நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் உரையாடல்கள் இடம்பெற்றதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எனது இல்லத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது’ என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேம்படுத்தும் பல அம்சங்களை எங்களால் விவாதிக்க முடிந்தது. நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்’ என்றும் நம்பிக்கை வெளியிட்டு இருந்தார்.
ஜி20 உச்சிமாநாட்டின் நேற்றைய நிகழ்வுகள் குறித்து மேலும் படிக்க:- ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி