ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சிகளுக்கு... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு : இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பிரதிபலிக்கும்
ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும்.
ஜி-20 மாநாடு
இந்தியா, ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடக்கிறது.
ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அங்கு நிறைய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கண்டுகளிக்கலாம்.
‘கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்ப திட்டங்கள்
பாரத் மண்டபத்தின் 4 மற்றும் 14-ம் எண் அறைகளில், ‘டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப திட்டங்களின் அனுபவத்தை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கியமான முன்முயற்சிகள், ஆதார், டிஜிலாக்கர், யு.பி.ஐ., இசஞ்சீவானி, திக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி., ஆஸ்க் கீதா ஆகிய திட்டங்களின் சிறப்பம்சங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளன.
கோவின் இணையதளம்
மேலும், மைகவ், கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ‘கோவின்’ இணையதளம் மற்றும் ஜன்தன், இ-நாம், ஜி.எஸ்.டி.என், பாஸ்டேக் போன்ற முக்கியமான தொழில்நுட்ப திறன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம், யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு, ருபே உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில், பண பரிமாற்றத்துக்காக, ‘யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கைவினை பொருள் பஜார்
இதுதவிர, ‘கைவினை பொருள் பஜார்’ என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயாரிப்புகள், கதர் கிராம தொழில் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் தயாரிப்புகளை அதில் பார்க்கலாம்.
ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்காக இந்த கைவினை பொருள் பஜார் அமைக்கப்பட்டுள்ளது.