அரசு ஊழியர்களுக்கு கட்சிப்பணி: ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் - ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள்

ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி 57 முன்னாள் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2022-09-16 07:10 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி 57 முன்னாள் அதிகாரிகள் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், டெல்லியில் உள்ள அரசு ஊழியர்களை எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்த ஆம் ஆத்மி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

செப்டம்பர் 3 ஆம் தேதி குஜராத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய கெஜ்ரிவால்,காவல்துறை பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் இறுதியாக வாக்குச் சாவடி அலுவலர்கள் ஆகியோரை குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காகப் பணியாற்றுமாறு கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 56 ஓய்வுபெற்ற அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.

அரசு ஊழியர்களை ஆளுங்கட்சியினர் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துவது சரியல்ல என அதிகாரவர்க்கத்தினர் விமர்சித்தனர்.இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968 இன் பிரிவு 16ஏ ஆகியவற்றின் விதிகளை மீறுவதாக முன்னாள் அதிகாரிகள் கூறினர். தங்கள் கடிதத்தை பரிசீலித்து, ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர்.

அந்த கடிதத்தில், முன்னாள் ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் பிற சேவைகளின் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களை தவறாக வழிநடத்தி தங்கள் சொந்த லாபத்திற்காக பயன்படுத்த ஆம் ஆத்மி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி, ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றினால், இலவச மின்சாரம், புதிய பள்ளிகள், இடமாறுதல்களுடன் இலவச கல்வி போன்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

இந்த கடிதம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்வது கெஜ்ரிவாலின் உரிமை. பொதுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக வேலை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தது மிகவும் தவறானது. சட்டப்படி, அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யக்கூடாது.

கெஜ்ரிவால் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர். அப்படி இருந்து கொண்டு, செய்தியாளர் சந்திப்பில் பொறுப்பற்ற முறையில் அவர் இவ்வாறு பேசுவது மிகவும் தவறானது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்