பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் முதற்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 48 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. ஆனால் ஆளும் கட்சியான பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில், டெல்லியில் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து மாநில பா.ஜனதா தலைவர்கள் மும்முரமாக உள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகலாம் என தகவல் வெளியானது. இதையொட்டி வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தலாம். இதை கருதி நேற்று காலை முதலே பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.