வாடகை ஒப்பந்தத்தை மீறி செயல்பட்ட வங்கி: ரூ. 1.23 கோடி இழப்பீடு வழங்க கோர்ட்டு அதிரடி
இடத்தின் வாடகை ஒப்பந்த காலம் முடிந்தும் அதே இடத்தில் வங்கி தொடர்ந்து செயல்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் எஸ்எஸ் ஜந்த்ஹலி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி செயல்படுவதற்கான வாடகை பணத்தை ஒப்பந்த அடிப்படையில் வங்கி நிர்வாகம் இடத்தின் உரிமையாளர் ஜந்த்ஹலியிடம் வழங்கி வந்தது.
இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு ஜுன் மாதம் வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும், அதே இடத்தில் வங்கி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வாடகை ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் இடத்தை காலி செய்யவில்லை என வங்கி மீது உரிமையாளர் எஸ்எஸ் ஜந்த்ஹலி தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த கோர்ட்டு, ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் இடத்தை காலி செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டு வங்கி தனியார் சொத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக கோர்ட்டு தெரிவித்தது. மேலும், சொத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக அதன் உரிமையாளருக்கு 1.23 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வங்கிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.