பெண் போலீஸ் அதிகாரி மீது கமிஷனர் அலுவலக ஊழியர்கள் புகார்

மனதளவில் தொல்லை கொடுப்பதாக பெண் போலீஸ் அதிகாரி மீது பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் புகார் கடிதம் கொடுத்து உள்ளனர்.

Update: 2022-10-18 21:28 GMT

பெங்களூரு:

மனதளவில் தொல்லை கொடுப்பதாக பெண் போலீஸ் அதிகாரி மீது பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் புகார் கடிதம் கொடுத்து உள்ளனர்.

நிஷா ஜேம்ஸ் மீது புகார் கடிதம்

பெங்களூருவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை போலீஸ் கமிஷனராக (நிர்வாக பிரிவு) பணியாற்றி வருபவர் நிஷா ஜேம்ஸ். இவர் மீது குற்றச்சாட்டு கூறி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் முதல் மற்றும் 2-ம் நிலை ஊழியர்கள் சிலர் நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சலீமிடம் 13 பக்க புகார் கடிதத்தை கொடுத்து உள்ளனர்.

அதில்,'நிர்வாக பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் நிஷா ஜேம்ஸ், ஊழியர்களான எங்களுக்கு மனதளவில் தொல்லை கொடுத்து வருகிறார். ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து ஊழியர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையால் பணி மீதான எங்களது உற்சாகம் குறைந்து உள்ளது.

மனஅழுத்தத்திற்கு ஆளாகி...

அலுவலக கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்றே தாமதம் செய்கிறார். அவர் வீட்டிற்கு செல்லும் வரை அனைத்து ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்.

இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம். அவரின் இந்த அணுகுமுறையை எதிர்த்து கேள்வி கேட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நிஷா ஜேம்ஸ் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

கேலிக்குரிய செயல்

ஆனால் இந்த விவகாரத்தில் நிஷா ஜேம்சுக்கு ஏராளமான போலீசார் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தன் மீதான புகார் கடிதம் குறித்து நிஷா ஜேம்சிடம் கேட்ட போது, இந்த மாதிரி கடிதம் எழுதுவது முட்டாள்தனமான, கேலிக்குரிய செயல் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்