தேர்வில் தோல்வி அடைந்ததால்பி.யூ.கல்லூரி மாணவி விஷம் குடித்து சாவு

தேர்வில் தோல்வி அடைந்ததால் பி.யூ.கல்லூரி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-04-27 18:45 GMT

சிக்கமகளூரு-

தேர்வில் தோல்வி அடைந்ததால் பி.யூ.கல்லூரி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் குடித்தார்

சிக்கமகளுரு மாவட்டம் கலசா தாலுகா மேகல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மகள் ஸ்பர்ஷா (வயது 18). ஜாம்பலே கிராமத்தைச் சேர்ந்தவர் சவிதா. இவரது மகள் தீக்ஷா. ஸ்பர்ஷா மற்றும் தீக்ஷா 2 பேரும் தோழிகள் ஆவர். இவர்கள் 2 பேரும் கலசா அரசு கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் ஸ்பர்ஷாவும் மற்றும் தீக்ஷாவும் தேர்வில் தோல்வி அடைந்தனர். இதனால் 2 பேரும் மனவேதனையில் இருந்து வந்தனர். அவர்கள் 2 பேருக்கும் பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். மேலும் அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என பெற்றோர் கூறினர். ஆனாலும் ஆறுதல் அடையாத ஸ்பர்ஷா நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கலசா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்பர்ஷா பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஸ்பர்ஷா விஷம் குடித்தது பற்றி அறிந்ததும், தீக்ஷாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கலசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்த கல்லூரி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்