தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர் - பசவராஜ் பொம்மை பேட்டி
சில தலைவர்கள் சென்றாலும் கட்சி தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
சில தலைவர்கள் சென்றாலும் கட்சி தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
டிக்கெட் கிடைக்காதவர்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பிற கட்சிக்கு செல்கிறார்கள். இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து கூறியுள்ளார்.
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பொருத்தமான வேட்பாளர்கள்
தேர்தலில் போட்டியிட பொதுவாக ஆளுங்கட்சியில் அதிகம் பேர் டிக்கெட் கேட்பார்கள். அதேபோல் தான் தற்போது எங்கள் கட்சியில் அதிக எண்ணிக்கையில் வாய்ப்பு கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சி தொண்டர்களிடம் பேசியுள்ளோம். சில தலைவா்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையில் கட்சியை விட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் சென்றாலும் தொண்டர்கள் கட்சியில் தான் உள்ளனர். கட்சி தொண்டர்கள் உறுதியுடன் உள்ளனர்.
60 தொகுதிகளில் காங்கிரசுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்த சிலரை அக்கட்சியினர் ஏற்கனவே சேர்த்து கொண்டனர். அதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் கட்சி மற்றும் தொண்டர்கள் வலுவாக உள்ளனர். பா.ஜனதாவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.