அரியானா: சட்டவிரோத சுரங்க பணி ஆய்வில் டி.எஸ்.பி., மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி
அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணியை ஆய்வு செய்ய சென்ற டி.எஸ்.பி. மற்றும் மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
கர்னால்,
அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணிகள் நடைபெறுகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கருண்டா பகுதியில் ஆய்வு பணிக்காக டி.எஸ்.பி. மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை சென்று உள்ளது.
இந்நிலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த டி.எஸ்.பி. மற்றும் மாஜிஸ்திரேட் மீது லாரி ஓட்டுனர் ஒருவர் திடீரென லாரியை கொண்டு மோதி கொல்ல முயற்சித்து உள்ளார்.
எனினும், உஷாரான அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து தப்பியுள்ளனர். இதுபற்றி டி.எஸ்.பி. மனோஜ் கூறும்போது, சட்டவிரோத சுரங்க பகுதியை ஆய்வு செய்ய சென்றபோது, லாரி ஓட்டுனர் எங்கள் மீது மோதி விட்டு செல்ல முயன்றார் என கூறியுள்ளார்.
அந்த பகுதியில் சில நாட்களாக சட்டவிரோத சுரங்க பணிகள் நடைபெற்று வருவது போல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி கர்னல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கங்கா ராம் பூனியா கூறும்போது, சுரங்க துறை மற்றும் போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.
அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில், சட்டவிரோத சுரங்க பணிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் கிடைத்து ஆய்வு செய்ய டி.எஸ்.பி. பிஷ்னோய் என்பவர் சென்றுள்ளார்.
போலீசாரை கண்டதும் பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்தும்படி சைகை காட்டினார். ஆனால் அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்தடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2021-22 ஆம் ஆண்டிற்கான அரியானா பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2014-15 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களை வெட்டி செல்வது உட்பட மொத்தம் 21,450 சட்டவிரோத சுரங்க வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி, ஆரவல்லி பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.