பெண் பயணி இருக்கையில் ஆண் பயணி சிறுநீர் கழித்த 2-வது சம்பவம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

பெண் பயணி இருக்கையில் ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் ஏர் இந்தியா தகவல் தெரிவிக்கவில்லை.

Update: 2023-01-24 11:28 GMT

டெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் இருந்த ஆண் பயணி இருக்கையில் இருந்த வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தகவல் கொடுக்காமல், பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளாத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்ச ரூபாய் அபாராதம் விதித்தது.

இந்த சம்பவம் மறைவதற்குள் ஏர் இந்தியா மீது 2வது புகார் எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிசில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. இந்த சம்பவம் குறித்தும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு தகவல் கொடுக்கவில்லை.

இந்நிலையில், விமானத்தில் பெண் பயணி இருக்கை மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த 2-வது சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த மாதம் நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுக்காமல் தாமதித்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கனவே 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது சம்பவத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்